வாழ்க்கை என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது – – சஞ்சயன் Reviewed by Momizat on . ஏப்ரல் மாத ஆக்காட்டி இதழில் வெளியான எனது பத்தி.   சில நாட்களாகவே காலநிலையைப் போல மனநிலையும் சற்று இருண்டும், உட்சாகமின்றியும் இருக்கிறது. இன்று காலை விழித் ஏப்ரல் மாத ஆக்காட்டி இதழில் வெளியான எனது பத்தி.   சில நாட்களாகவே காலநிலையைப் போல மனநிலையும் சற்று இருண்டும், உட்சாகமின்றியும் இருக்கிறது. இன்று காலை விழித் Rating: 0
You Are Here: Home » Front page » வாழ்க்கை என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது – – சஞ்சயன்

வாழ்க்கை என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது – – சஞ்சயன்

Life ஏப்ரல் மாத ஆக்காட்டி இதழில் வெளியான எனது பத்தி.

 

சில நாட்களாகவே காலநிலையைப் போல மனநிலையும் சற்று இருண்டும், உட்சாகமின்றியும் இருக்கிறது. இன்று காலை விழித்துக்கொண்டபோது வானம் நீலமாகவும், சூரியன் தனது மெதுவெம்மையை பரப்பியபடியும் இருப்பதைக்கண்ட மனம் மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டிருந்தது. பல நாட்களின் பின், பல மாதங்களி்ன் பின் இந்த மனநிலையை உணர்ந்தேன். மனம் ஒருவித புத்துணர்ச்சியை உணர்ந்துகொண்டிருந்தது.

இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடிய அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு தொலைபேசியில் பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறுஞ்செய்தி அனுப்பினேன். ”சரி» என்று பதில் குறுஞ்செய்தி வந்தது.

கைத்தொலைபேசியில் ஒஸ்லோ நகரத்து வெப்பநிலை 12 பாகை என்றிருந்தது. இவ்வருடத்தில் இதுவே முதற்தடவை வெப்பநிலை 12 பாகையாக இருப்பது. எனக்கு மிகவும் பிடித்தமான வெப்பநிலை 10 – 20க்கும் இடைப்பட்ட காலநிலையே. எனவே மகிழ்ச்சியுடன் இளம் சூடான வெய்யிலை உணர்ந்தபடி, நண்பரைக் காண்பதற்காக நடந்து கொண்டிருந்தேன். வழியெங்கும் வெய்யிலின் சூட்டை அனுபவித்தபடியே நடந்துகொண்டிருந்தார்கள்.

கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்து கொண்டேன். அற்புத அழகியொருத்தி என்ன தேவை என்று கேட்டறிந்து பரிமாறினாள்.

நண்பருக்கு 65 வயதிருக்கும். அவர் ஒரு வைத்தியர். ஐ.நா வின் வைத்தியப்பிரிவினூடாக பல நாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்தவர். ஒஸ்லோவின் பிரபல வைத்தியராக இருந்வர். விவாகரத்தின் பின் உக்ரைன் நாட்டு அழகியெருத்தியில் ஆசைப்பட்டு அண்மையில் அவளை திருமணம் செய்திருக்கிறார். எனது நண்பர் பெண்கள் என்றால் அற்புதமாய் ரசிக்கும் கலைப்பண்புடையவர். அந்த அழகிக்கும் இவருக்கும் 20 வயதிலும் அதிக வயது வேறுபாடு உண்டு. வைத்தியரின் புதிய மனைவி உண்மையிலேயே அழகானவர். அவர் எங்களை நோக்கி நடந்து வந்தாலோ, அல்லது எம்மிடம் இருந்து திரும்பிச் சென்றாலோ அவரின் அபரிமிதமான அழகு எமது இதயத்துடிப்பை அதிகமாக்கும். நான் அவரைக் கண்டிருக்கிறேன். அவரும் ஒரு வைத்தியர். இருவரும் அடிக்கடி பயணப்படுவார்கள். நோர்வேயில் தங்கியிருப்பதைவிட அவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நேரமே அதிகம்.

நான் அவரைச் சந்தித்தது, கணிணியும் இணையமும், பாதுகாப்பும் என்பது பற்றி ஒரு ரோட்டறிக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்ட நாளில். அன்றில் இருந்து அவரது கணிணிப் பிரச்சனைகளை நான் தீர்க்கிறேன், அவர் எனது வைத்திய பிரச்சனைகளை அவர் தீர்க்கிறார். நாம் பணம் கொடுப்பதும் இல்லை, வாங்குவதும் இல்லை. ஆனால் பண்டமாற்று எம்மிடையில் உண்டு. அவரது கணிணி பழுதடைவதைவிட நான் சுகயீனமுறும் சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனாலும் மனிதர் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. வைத்தியரிடம் எதையும் மறைப்பது கூடாதல்லவா? எனவே அவருக்கு என்னைப்பற்றிய அனைத்தும் தெரியும். அவரைப் பற்றியும் எனக்கு தெரியும். நகைச்சுவையுணர்வுள்ளவர். நொதித்த பழரசத்திலும், அழகிய பெண்களும் அவருக்கு போதையை தரவல்வை. அவரும் மனிதரல்லவா.

நாம் இருவரும் இளஞ் சூரிய ஒளியினை முகத்தில் விழுத்தியபடியே அதன் இளம்சூட்டினை அனுபவித்துக் கொண்டே உரையாடிக்கொண்டிருந்தோம். இருவரின் வாழ்க்கையும் இருவருக்கும் தெரியும் என்பதால் நாம் எதையும் வெளிப்படையாகப் பேசிக்கொள்பவர்கள். வாழ்க்கைபற்றி பேச்சுத்திரும்பியது.

என்னிடம் ஒரு அயர்ச்சி தென்படுவதாகக் கூறினார். அது பேச்சிலும் எதிரொலிக்கிறது என்றார். மனிதர் என்னையும், அவருடனான எனது உரையாடலையும் மிக நுணுக்கமாக அவதானிக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.

”ஆம், யான்” என்றேன் நான். யான் என்பது அவரது பெயர். என்னை ஊடுவிப்பார்த்தார். ”உனக்கு அடுததவருடம் 50 வயதாகிறது என்பது புரிகிறதா” என்றார். ”புரிகிறது என்றே நினைக்கிறேன்” என்றேன் நான்.

”வாழ்க்கையை நீ எப்படிப் பார்க்கிறாய்” என்றார் அவர்.

உடனேயே என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தேனீரை எடுத்து உறுஞ்சியபடியே சிந்தித்தேன்.

”வாழ்கை ஒரு ஓட்டப் பந்தயம். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாலே அன்றி அங்கு உனக்கு இடமில்லை என்று எங்கோ வாசித்த அனுபவம்” என்று கூறினேன்.

சிரித்தபடியே ”தொடர்த்து ஓடினால் மட்டும் அது போதுமானதல்ல, நீ வெற்றியீட்டுவதும் அவசியம்” என்றார்

”எனக்கு நான் உயிர்த்திருக்கிறேன் என்பதே போதுமாய் இருக்கிறது, வெற்றியீட்டுவது அவசியமாயில்லை” என்றேன் அவரிடம்

”உயிர்த்திருத்தல் வேறு, வாழ்தல் வேறு என்ற உண்மையை நீ புரிந்து கொள்ளல்b வேண்டும். நீ மன அழுத்தத்தில் வாழுந்து கொண்டிருப்பதால், உனது மனநிலை வாழ்க்கை மீதான எதுவித பிடிப்பையும் கொண்டிருக்கவில்‌லை. என‌வேதான் உயிர்த்திருப்பது போதுமாயிருக்கிறது உனக்கு” என்றார்.

”உயிர்த்திருத்தல் வேறு, வாழ்தல் வேறு” இதே வாசகங்களை முன்பும் ஒருதடவை கேட்டிருக்கிறேன். சென்ற வருடம் இலங்கை சென்றிருந்தபோது, எனது ஆசிரியர்களில் ஒருவரைச் சந்தித்தேன். வாழ்ந்து முடித்த அயர்ச்சியில் இருந்தார் அவர், தனது 90 வயதுகளில் வாழ்க்கை முடிவடையாது தொடர்ந்து செல்கிறது, என்பதை மேற் கூறிய வாசங்களின் முலம் உணர்த்தியிருந்தார்.

நண்பர் தொடர்ந்தார்,

”வாழ்வின் மீதான அயர்ச்சி பலரையும் வாழ்வின் மீதான பிடிப்பில் இருந்து விலக்கிவைப்பது மட்டுமல்ல, அவர்களை அவர்களின் பிரச்சனைகளில் இருந்து மீளமுடியாத ஒரு சுழற்ச்சி மனநிலையைக் கொடுக்கிறது”. அவர் எதையோ எனக்கு போதிக்கிறார் என்ப‌தை மட்டும் உணர்ந்துகொண்டேன். மிகுதி புரியவில்லை. புரியாதவற்றை புரியாமாலே விடுவதில் ஏற்பில்லை எனக்கு. எனவே ”நீங்கள் கூறுவது புரியவில்லை, சற்றே விளக்கிக் கூறுங்கள் என்றேன்”.

என்னைப் பார்த்து புன்னகைத்தபடியே கேட்டார் ”2012ம் வருடம் நீண்டதொரு நடைப்பயணம் சென்றாயே, ஏன் அந்த நடைப்பணத்தை மேற்கொண்டாய்” என்றார்.

”என்னுடன் எனக்கு சமரசமாக வேண்டிய அவசியமும், என்னை நான் வெல்லவேண்டிய அவசியமும், என்னாலும் சாதிக்கமுடியும் என்ற எண்ணத்தைப் பெறும் அவசியமும், எனது தோல்விகளை வென்றுவிடவேண்டும் என்ற எண்ணமும் என்னை 750 கி.மீ நடக்கவைத்தன” என்றேன் நான்.

”ஆக, உனக்கு வாழ்வு மீதான பிடிப்பு வந்திருந்தபடியால், சாதிக்கவேண்டும் என்ற மனநிலை அவசியப்பட்டதால், நீ நடைப்பயணத்தை மேற்கொண்டாய்” என்ன நான் சொல்வது சரிதானே என்றா‌ர்.

”ம்ம்” என்றேன் நான்.

இப்போது கூட உனது அயர்ச்சியின் அடிப்படைக் காரணம் நீ தந்தையாய் தோல்வி அடைந்திருப்பதாய் நினைப்பதே. நீ அதையே நினைத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் நீ நினைப்பது தவறு. ஒரு சில தவறுகளால் எழுந்துகொள்ள முடியாத நிலைக்கு மனிதர்கள் தள்ளப்படுவார்கள் எனின், இன்று உலகம் முழுவதும் உன்னைப்போன்ற மனநிலையுடையவர்களே நிரம்பியிருப்பார்கள். நீ உனது வாழ்வினைப்பற்றி, அதன் உண்மைத்தன்மைகளை, யாதார்த்தங்களை, வலிகளை எழுதுகிறேன் என்று கூறுவது உண்மையானால் நீ உனது வாழ்க்கைய வென்றுகொண்டிருக்கிறாய். வலிகள் கடக்கக் கற்றுக்கொள். அவற்றுடன் வாழப்பழகாதே என்றார்.

7 – 8 ஆண்டுகளுக்கு முன்பு, நீ மேற்கு நோர்வேயின் மலைகளில் நடந்து உனது சோகங்களையும், வலிகளையும், ஏமாற்றங்களையும் வெற்றி கொண்டது போன்று, நடைப் பயணத்தில் உன்னையே நீ வெற்றிகொண்டது போன்று, 12000 அடி உயரத்தில் இருந்து விமானம் மூலமாக குதித்து போன்று அடிக்கடி, உனக்கு உன்னை நீயே வெற்றிகொள்கிறேன், என்னாலும் முடியும் என்னும் உணர்வு கிடைப்பது அவசியமாயிருக்கிறது. அவ்வணர்வே என்னாலும் வாழமுடியும், தோல்விகளை ஏற்கமுடியும், சாதனைகள் புரியமுடியும் என்னும் எண்ணத்தைத் உனக்குத் தருகிறது அல்லவா என்ற‌போது எனக்கு அவர் என்ன பேசுகிறார், என்னை எங்கு அழைத்துப்போகிறார் என்பது விளங்கத்தொடங்கியது.

வாழ்வில் தோல்விகளை ஜீரணிப்பதும், ஏற்றுக்கொள்வதும் எவ்வளவு முக்கியமானது என்பதை எது வாழ்க்கை எனக்குப் புகட்டியிருக்கிறது. இழக்கக்கூடாதவற்றை இழந்து எனது தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எனது இரு குழந்தைகளையும் பிரிந்தது எனது வாழ்வின் மிகப்பெரிய ‌தோல்வி. கடந்த 5 ஆண்டுகளாக இந்த தோல்வியை கடந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். சாண் ஏற முழம் சறுக்கும் விளையாட்டு அது. மற்றையவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்திருந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றும். கடந்துவந்த பாதையின் போக்குகளை அவசரப்பட்டு முடிவெடுத்திருக்கிறேனோ என்றும் பல பின்மாலைப்பொழுதுகளில் சிந்தித்தபடியே ‌தூங்கிப்போயிருக்கிறேன்.

யான் பேசிக்கொண்டிருந்தார். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். எனது முதல் மனைவியுடனான விவாகரத்தின்பின் எனக்கு எனது மூத்த மகனுடன் தொடர்பற்றுப்போனது. அவன் அதை விரும்பவில்லை. ஆனால் மற்றையவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள். மனிதர்களின் வாயைப் போன்றதொரு அசிங்கமாக அங்கம் வேறு எதுவுமில்லை. பேச்சுக்கள் அவசியமற்றுப் போகும்போது பிரிவுகள் அவசிமாகிறது. மூத்த மகன் விவாகரத்தை ஏற்றுக்கொள்ளவில்லையே என்பது மனதை நோகடித்தாலும், நான் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை.

காலத்தைப்போன்ற ஆசான் எவருமில்லை. எந்தக் காயத்தையும் சுகமாக்கும் மருந்து, காலம். இன்று மகிழ்ச்சியாய் இருப்பவன் நாளை துன்புறலாம், இன்று துன்புறுபவன் நாளை மகிழ்ச்சியாய் வாழலாம். ஏற்றமும் இறக்கமும் உன் நிழலைப்போன்று எப்போதும் உன்னோடு வந்துகொண்டே இருக்கும். கிடைப்பதை ஏற்றுக்கொள். அவை உனது வினைகளின் பெறுபேறுகள். உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்தும் சிந்திக்காதே. அவை எப்போதும் சிக்கலையே தரும். இப்படியாக பிரசங்கித்துக் கொண்டிருந்தார். எனக்கு பலது புரிந்தும் சிலது புரியாமலும் இருந்தது. என்னைக் கவனிக்காது தொடர்ந்தார்.

உனது பிரச்சனைகளை பட்டியலிடு, வரிசைப்படுத்து, உன்னை மகிழ்ச்சியாக்கும் காரணிகளை அடையாளம் காண், சிறந்த நண்பர்களுடன் சேர்ந்துகொள். உனக்கு மன அழுத்தத்தை தருபவர்களை தவிர்த்துக்கொள், வாசி, இசையை ரசி, பயணப்படு, புதிய மனிதர்ளை சந்தி இப்படி எத்தனையோ வழிகளில் வாழ்வின் மீதான பிடிப்பை சிறிது சிறிதாக மீட்டுக்கொள்.

பெண் என்பவள் இல்லாது ஆணால் இயங்கமுடியாது. எனவே ஒரு துணையைத் தேடிக்கொள். உதாரணத்திற்கு என்னைப்பார். எனக்கும் கத்தரீனாவுக்கும் இடையில் 20வயதுக்கு இடையேயான இடைவெளியுண்டு. இந்த வயதில் கலவிக்கு ஆசைப்பட்டு நான் திருமணம் செய்யவில்லை. ஆனால் எனக்கு பெண்ணிண் அருகாமையும், அன்பும், கரிசனையும், வாசனையும் அவசியமாய் இருக்கிறது. பெண்களைப்போன்று பாதுகாப்பு உணர்வினை எவராலும் தரமுடியாது. தாய்மையின் முக்கிய அம்சம் அது. சில நேரங்களில் மன அறுதலுக்காக அவள் தோளில் சாயும்போது பேரமைதி கிடைக்கிறது. கொடுந்தனிமையில் படுக்கையில் புரண்டுறுள என்னால் முடியாது. இதை சொல்வதற்கு எனக்கு வெட்கமில்லை. ஏனெனில் என்னை நான் நன்கு புரிந்திருக்கிறேன். ஒரு பெண்ணினால் ஒரு மனிதனை அமைதிப்படுத்தவும் முடியும், ஆவேசப்படுத்தவும் முடியும் என்று கூறியபடியே குறும்புச் சிரிப்புடன் கண்ணைச்சிமிட்டினார். நானும் சிரித்தேன்.

உங்கள் கலாச்சாரத்தில் இவை இலகுவாக இருக்கும். எமது கலாச்சாரத்தில் அப்படியல்ல என்றேன். நோர்வேஜிய மொழியில் உள்ள ஒரு கெட்டவார்த்தையால் திட்டினார். சுற்றி இருந்தவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள். நாம் இருவரும் சிரித்துக்கொண்டோம். வாழ்வு என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது. வாழ்தல் என்பது எல்லோருக்கும் பொதுமையானது. உன் கலாச்சாரங்கள் உனக்கு சிக்கலான வாழ்வினை தருகிறது என்றால் அதை கேள்விக்குட்படுத்தவேண்டும். சில பிரச்சனைகளுக்கு உணர்ச்சிபூர்வமான தீர்வுகளை விட யதார்த்தமான அறிவுசார்ந்த முடிவுகளே அவசியம் என்பதாவது உனக்குப் புரிகிறதா? உன் வாழ்வை நானோ, ஏனையவர்களோ வாழ்வதில்லை. அதை நீயே முடிவுசெய்கிறாய். வாழ்கிறாய், வாழப்போகிறாய் என்றபடியே கையை மேலே உயர்த்தினார். அழகானதொரு பரிசாசகி அருகில் வந்து நின்றாள். இரண்டு ஆப்பிள் கேக், இரண்டு கறுப்புக்கோப்பி என்றார். எனக்கு ஆப்பிள் கேக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை அவர் அறிவார்.

சூடாக ஆப்பிள் கேக் வனிலா ஜஸ்கிறீமுடன் வந்தது. இரண்டையும் கலந்தெடுத்து வாயில் வைத்தேன். மெதுவாய் கர கரவென கரைந்துபோனது. நான் கண்மூடி சுவையை அனுபவித்ததை கண்டிருக்கவேண்டும் அவர். இதுபோலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையையும் சுவையாக்கிக்கொள்ளப்பழகிக்கொள். வாழ்க்கையை அனு அணுவணுவாக சுவைக்கப்பளகு என்றார்.

அவருடன் பேசியது மனதுக்கு ஆறுதலாகவும், உற்சாகத்தையும் தந்திருந்தது. சிந்தனையையும் தூண்டியிருந்தது. அன்றிரவு சாமம் கடந்த பின்பும் தூக்கம் என்னை ஆட்கொள்ளவில்‌லை. மீண்டும் ஒரு நீண்ட நடைப்பயணம் சென்றால் என்ன என்னும் கேள்வி என்னை குடைந்துகொண்டிருந்தது. அதிகாலையில் விழித்துக்கொண்ட ‌போது முதலில் நினைவுக்கு வந்தது நீண்ட நடைப்பயணமே.

தொலைபேசியை எடுத்து ”மிக விரைவில் மீண்டும் ஸ்பெயின் நாட்டின் வடக்குப்பகுதியில் 830 கி.மீ நடக்க முடிவெடுத்திருக்கிறேன் என்று எழுதி யான்க்கு அனுப்பினேன்.

வாழ்த்துக்கள், உன் பயணக்கதையை கேட்க ஆவலாய் இருக்கிறேன்.

பி.கு: ஸ்பெயின் நாடு பேரழகிகளுக்கும், பழரசத்துக்கும் பிரபல்யமானது என்பதையும் நினைவூட்டுகிறேன் என்றிருந்து அவரது பதில் .

Leave a Comment

 

Scroll to top