தேடலும் தெளிவும்…! – கார்மேகம் நந்தா Reviewed by Momizat on . உலகமே மகளிர் தினம் கொண்டாடிய நாளில் உள்ளூரில் நோர்வே நாட்டின் தலைநகரில்.... மூத்த தமிழ் இசைக்கலைஞர் "சங்கீத வித்துவான் " திருமதி.குணபூஷணம் ( மல்லிகா ) நாகராஜா அ உலகமே மகளிர் தினம் கொண்டாடிய நாளில் உள்ளூரில் நோர்வே நாட்டின் தலைநகரில்.... மூத்த தமிழ் இசைக்கலைஞர் "சங்கீத வித்துவான் " திருமதி.குணபூஷணம் ( மல்லிகா ) நாகராஜா அ Rating: 0
You Are Here: Home » Front page » தேடலும் தெளிவும்…! – கார்மேகம் நந்தா

தேடலும் தெளிவும்…! – கார்மேகம் நந்தா

bilde
உலகமே மகளிர் தினம் கொண்டாடிய நாளில்
உள்ளூரில் நோர்வே நாட்டின் தலைநகரில்….
மூத்த தமிழ் இசைக்கலைஞர் «சங்கீத வித்துவான் » திருமதி.குணபூஷணம் ( மல்லிகா ) நாகராஜா அவர்களின் நல்லை முருகன் இசைத்தமிழ் மன்றம் நடாத்திய
«திரை இசை இராகங்கள் 2015″ நிகழ்ச்சியில்
பார்வையாளராக மூன்று மணிநேரம் அமரும் வாய்ப்பு…
(ஏற்கனவே ஒப்புக்கொண்ட இன்னொரு நிகழ்வினால் ஒருமணி நேரம் முன்பே வெளியில் வந்தேன் )
மல்லிகா நாகராஜா அவர்கள் எனது கற்பனையில்
விளைந்த நள்ளிரவில் கதிர் உலவும் நாட்டினிலே..,
எங்கும் நிறைந்தவளே இசையில் கலந்தவளே…,
தேசம் விட்டு தேசம் தேடும் பாதம்… என்னும்
மூன்று மெல்லிசைப் பாடல்களை முறையே…
வே. இரவிகுமார் , கணேசன் சுந்தரமூர்த்தி ,
மு.முரளிதரன் என்னும் மூன்று இசையமைப்பாளர்களின்
இசையமைப்பினில் பாடிச்சிறப்பித்தவர்.
அதைப்போலவே எனது வானொலி நிகழ்ச்சித் தயாரிப்புக்களிலும் உதவிக்கரம் நீட்டிய கலைஞர்….
இனியகுரல் வளம் படைத்த அவருடனான எனது கலைத்துறை நட்பின் வயது கால்நூற்றாண்டுகளைக் கடந்தது என்றால் மிகையாகிவிடாது…
இரண்டாவது ஆண்டாக இடம்பெற்ற திரையிசை இராகங்கள் கலைமாலை நேர அட்டவணைப்படி
மிகச்சரியாக ஆரம்பமானது…
மங்கள விளக்கேற்றலின் தொடர்ச்சியாக….
அகவணக்கம் இடம்பெற்றது…
முதல் பாடலை கல்யாணி ராகத்தில் இயற்றி,மெட்டமைத்து தன் மாணவர்களுடன்
மல்லிகா நாகராஜா அவர்களும் பாடினார்….
பாடலின் நிறைவு வரிகள் சம்மட்டியாகத் தாக்கியது…!
» முதலிசையாம் தமிழிசையை வளர்த்திடுவோம்….»
அடுத்துவந்த வரவேற்புரை…
நிகழ்ச்சியின் நோக்கத்தை தெளிவுபடுத்தியது…
தொடர்ச்சியாக ஒன்பது திரைப்படப் பாடல்களை…
அதுவும் இளையராஜா , ரகுமான் ,யுவன்,ஜிப்பிரான்
என்று பல இசையப்பாளர்களின் பாடல்களைக் கேட்க முடிந்தது…மாணவர்களும் இயன்றவரையில்…
சிறப்பாகவே பாடினார்கள்…
வாத்தியக் கலைஞர்களின் பங்கு அளப்பரியது…!
நிகழ்வில் பிரதமவிருந்தினர்…
திரு.வசீகரன் சிவலிங்கம் அவர்களின் உரை…
உண்மையில் வசீகரமாகவே இருந்தது அதிலும்…
தனது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில்….
ஒரு கலைஞருக்கு வாய்ப்புத்தருவதாக அவர்தந்த….
வாக்குறுதி பலரை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும்…
இது போன்ற நிகழ்ச்சிகளில் விருந்தினர்களாக உரையாற்ற வருவோர் தாம் சார்ந்த நிறுவனங்களின்
புகழ் பாடுவதில் நேரத்தை விழுங்கி விடுவார்கள்….
அந்த வகையில் வசீகரன் பார்வையாளர்களை அதிகம்
சங்கடப்படுத்தவில்லை என்பது திண்ணம்…!
இன்னும் கேளுங்கள் என்ற வகையில்… யுவன் ,G.V.பிரகாஷ் என்னும் இசையமைப்பாளர்களின்
பாடல்கள் இரண்டு.
திரைப்பாடல்களைக் கேட்டவர்கள்…தொடர்ந்து……
ஒரு திரைப்பாடலை நடனமாக ரசிக்கும் வாய்ப்பும்
கனிந்தது…வாய்ப்பினை வழங்கிய ஆசிரியை…
திருமதி. துஷ்யா அமரசிங்கம் அவர்கள்…
மேடையினை அலங்கரித்தவர் அவரின் மாணவியே….
அதிகம் சிரமங்கள் இல்லாத நடன அமைப்பு….!
பாடல் ஒலித்தமாத்திரத்தில்……
«குழந்தையும் தெய்வமும்» நிழல் தரிசனம்….!
இடைவேளையினைத் தொடர்ந்து கலைக்கூட அதிபர்
மல்லிகா நாகராஜா அவர்களின் உரையும், பாடலும்
பலரையும் கவர்ந்தது போலவே என்னையும் கவர்ந்தது…
அவரைப்பற்றிய ஒரு சம்பவத்தையும் நினைவூட்டியது….
அடியேன் தொகுத்து வழங்கிய மேடைநிகழ்வில்……!
1993 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்
கணேசன் சுந்தரமூர்த்தி அவர்கள் Roots இசைக்குழுவினைத் தலைமை ஏற்று நடத்திய நாட்களில்
இசைஞானியின் இசையில் கலைஞன் என்ற படத்தில்
ஜேசுதாஸ் ,ஜானகி குரலில் இடம்பெற்ற..
எந்தன் நெஞ்சில் நீங்காத என்னும்…
நளினகாந்தி ராகத்தில் அமைந்த பாடலைப் பாட…
மல்லிகா நாகராஜா அவர்களை அழைத்தபொழுதில்
மேலைத்தேய வாத்தியங்கள் பின்னால் இருக்கும்
மேடையில் தான் பாடமுடியாது என்று மறுத்தவரை….
எப்படியெல்லாமோ பேசிமேடையேற்றினோம் என்பது
தனிக்கதை… ஆனால் இன்று அதே சங்கீதவித்துவான்
தன்னிடம் இசைபயிலும் மாணவர்களுக்காக…..
முழுக்க முழுக்க திரைப்பாடல்களின் சங்கமத்தில்….
ஒரு நிகழ்ச்சியினை நடத்துவது ஆச்சரியம் தான்…!
மாற்றம் என்னும் சொல்லினைத் தவிர எல்லாமே மாறிவிடும் என்பதன் நிதர்சனம் இதுவோ…?????
திருமதி மல்லிகா நாகராஜா அவர்களே…!
திரைப்படப் பாடல்களைத்தான் நீங்கள் முதலில் பாடியதாகவும்…அதன் தொடர்ச்சியாகவே முறையாக
சங்கீதம் கற்றுக்கொண்டதாகவும் சொன்ன
கருத்துக்களை வரவேற்கின்றேன்……
நடனக் கலைஞர்கள் சிலரும் இதில் சேரலாம்…….
ஆனால் «இசைக்குயில்» M.S.சுப்புலட்சுமி அவர்களையும்
தங்களின் கூட்டணிக்குத் துணையாக அழைத்ததை
இப்பதிவின் வழியாக மறுக்கின்றேன்….!!!
அடுத்த தலைமுறைக்காக சில தகவல்களை இங்கே
பதிவேற்றுகின்றேன்……
M.S.சுப்புலட்சுமி அவர்கள்…….
வீணைவித்தகி சண்முகவடிவு அவர்களின் மகளே.. பத்தாவது அகவையிலேயே….
அவர் குரலில் «மரகத வடிவும் செங்கதிர் வேலும்»
என்னும் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த கீர்த்தனை
இசைத்தட்டாக வெளிவந்து விற்பனையில் சரித்திரம்
படைத்திருக்கின்றது….
அதைப்போலவே 1932 ஆண்டு ஆங்கில வருடப்பிறப்பின்
முதல் நாள் «சங்கீத ரத்னாகர» அரியக்குடி ஶ்ரீ.ராமானுஜ அய்யங்கார் அவர்களுக்கு ஈடாக சென்னை வித்துவ சபையிலே தனது பதினாறாம் வயதினிலே பாடிய சிறப்பும்
M.S. அவர்களுக்கு உண்டு….அதன் வழியே….
இந்தியாவின் பல முக்கிய அரங்கங்களில் பாடியபின்னரே
1938 ஆம் ஆண்டிலே காந்திய சிந்தனைகளைப் பரப்புவதற்காகவே இயக்குனர் K.சுப்பிரமணியம் (நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை )
தயாரித்து இயக்கிய «சேவா சதனம் » என்னும் திரைப்படத்தில் கதைநாயகியானார்….!
இதைப் போலவே அவர் ஒவ்வொரு திரைப்படத்திலும்
சமூகசேவையின் நிமித்தமே நடிக்கநேர்ந்தது….
நடிப்பின் மூலம் ஈட்டிய வருமானத்தினையும் பொதுப்பணிகளுக்கே கொடுத்துவிட்டார்….
அவரின் இசைத்திறமைக்காக….திரைத்துறைதான்
அவரைப் பயன்படுத்தியது என்பதே உண்மை….!!!
அவர் பாடிய «சுப்ரபாதம்»ஒலித்தொகுப்பின் விற்பனைக்கு
நிகராக இந்தியாவில் எந்த இசைப்பதிவும் இல்லை….!
அக்கால கட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த பல
இசைக்கலைஞர்களை திரைத்துறை தன்னகப்படுத்தியது
என்பதை எவரும் மறுக்கமுடியாது…..!
காஞ்சி ஶ்ரீ சங்கராச்சாரியார் இயற்றிய பாடலை……
ஐநாவில் பாடிய முதல் இந்திய இசையாளுமையும்
«பாரத ரத்னா» M.S.சுப்புலட்சுமி அவர்களே…..!
மல்லிகா நாகராஜா அவர்கள் பாடிய N.S.சிதம்பரம்
அவர்கள் இயற்றி 1957 ஆம் ஆண்டிலே இசைமேதை
தஞ்சாவூர்.S.கல்யாணராமன் அவர்கள் இசையத்துப்பாடிய
மதுவந்தி ராகத்தில் அமைந்த » கண்ட நாள் முதலாய்….»
பாடல் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறதே……!
கல்யாணராமன் அவர்களின் துணைவியார்
திருமதி பூஷணி கல்யாணராமன் அவர்கள் ஈழத்தின்
வட புலத்தில் பிறந்தவர்.
பூஷணி அவர்களும், மல்லிகா அவர்களும்……
சென்னை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில்……
ஒன்றாகவே «சங்கீத வித்துவான்» கற்கைநெறியினைக்
கற்றுத்தேர்ந்தவர்கள் ……!
நிகழ்சியினை முழுமையாக ரசிக்க வாய்ப்பின்றிப்
போனதில் சற்று வருத்தமே…..!
(கலித்தொகை இதனிலும் களிப்பன்றோ)
மாணவர்களே……!
நீங்கள் பயில்வது தொல்லிசையாக இருந்தாலும்….
மெல்லிசையாக இருந்தாலும்……
அதன் ஜீவனை அறிந்து பாடுங்கள்……
நெக்குருகிப் பாடல் நிகரில்லா நிலையே……
அதைப்போலவே உங்கள் குரலுக்கு மிகப்பொருத்தமான
பாடல்களைத் தேர்ந்தெடுங்கள்….
இசைப்போட்டிகள் என்பது இன்னொரு அரசியல்….
அரங்கேற்றம் என்பது நிதி வளம் சார்ந்ததே… உங்கள் இசைத் தடயத்தினை…….
அழுத்தமாகப் பதிக்கவேண்டின்……
இசையின் அடிப்படையினைத் தேடலோடு……
தெளிவாகத் திருத்தமாக…….
கற்றுக்கொள்ளுங்கள்….!
நீங்கள் அகல் விளக்கா…? மின் விளக்கா….?
காலம் கட்டாயமாகச் சாற்றிவிடும்……!
இசை… இம்சை…இரண்டுக்கும்…
ஓரெழுத்தே…வேற்றுமை காட்டும்…….!!!

Leave a Comment

 

Scroll to top