இதைப்பற்றிப் பேசுவது பிழையாகுமா? Reviewed by Momizat on . நேற்றைய உரையாடல் ஒன்று மனதை கீறத்தொடங்கியது. அதன்பின் முகப்புத்தகத்தில் நான் எழுதிய நிலைத்தகவலை அடிப்படபடையாகவைத்தே இக் கட்டுரை எழுதப்படுகிறது. (நிலைத்தகவலை பார நேற்றைய உரையாடல் ஒன்று மனதை கீறத்தொடங்கியது. அதன்பின் முகப்புத்தகத்தில் நான் எழுதிய நிலைத்தகவலை அடிப்படபடையாகவைத்தே இக் கட்டுரை எழுதப்படுகிறது. (நிலைத்தகவலை பார Rating: 0
You Are Here: Home » Front page » இதைப்பற்றிப் பேசுவது பிழையாகுமா?

இதைப்பற்றிப் பேசுவது பிழையாகுமா?

நேற்றைய உரையாடல் ஒன்று மனதை கீறத்தொடங்கியது. அதன்பின் முகப்புத்தகத்தில் நான் எழுதிய நிலைத்தகவலை அடிப்படபடையாகவைத்தே இக் கட்டுரை எழுதப்படுகிறது. (நிலைத்தகவலை பார்வையிட: https://www.facebook.com/sanjayans/posts/10203396340295596 )

நாம் எந்தளவுக்கு எமது குழந்தைகளின் கல்வியில் பிரக்ஞைபூர்வமாக இருக்கிறோம், எம் குழந்தைகள், எதைக் கற்கிறார்கள், எவ்வித கருத்தியல்கள் அவர்களுக்கு நுண் அரசியலாகப் போதிக்கப்படுகின்றன என்பதில் நாம் கவனம் செலுத்துகிறோமா?

எனது நண்பருடனான உரையாடலின் பல கருத்துக்களுடன் நான் உடன்படுவதாலும், பல பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வியில் எதுவித சிந்தனையும் இன்றி சிலரது அரசியலுக்கு அடிபட்டுப்போவதும் எமது சமூகத்தை வளமானபாதையில் கொண்டுசெல்லப்போவதில்லை என்னும் எனது கருத்துக்களை பகிரவுமே இக்கட்டுரை எழுதப்படுகிறது. இவற்றைப்பற்றிப் பேசுவதே எனது எண்ணம்.

நோர்வேயில் எமது குழந்தைகள் இரு காலச்சாரமுறையில் வளர்கிறார்கள். இரண்டு பாடசாலைகளின் (நோர்வே பாடசாலைகள், தமிழ்பாடசாலைகள்) கருத்தியல், கற்பிக்கும் முறை ஆகியவற்றினூடாகவே பயில்கிறார்கள். வளர்கிறார்கள். வளர்ந்து பெரியவராகிறார்கள். இச் சமூகத்தின் அங்கம் ஆகிறார்கள்.

மனிதனுக்கு விழுமியம் (Ethics) என்பது முக்கியம். கற்பித்தலும் இதனடிப்படையிலேயே நடைபெறவேண்டும். பாடசாலைகளில் விழுமியங்கள் மீறப்படுகிறது என்றால் அதனை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு சமூகத்திடமே இருக்கிறது. பாடசாலையில் சமூகம் என்பது அது பெரும்பாலும் பெற்றோரையே குறிக்கிறது.

மேற்கூறிய கருத்துக்களுக்கு உதாரணமாக அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம். முதலாவது ஒரு பாடசாலையின் ஆண்டுவிழாவில் நடைபெற்ற நாடகம் பற்றியது.

இக் கட்டுரை, குறிப்பிட்ட அந்த ஆண்டுவிழா – நாடகம் பற்றிய விமர்சனம் அல்ல. அந்த ஆண்டுவிழாவில் பல சிறப்பான விடயங்கள் நிட்சயமாக நடந்திருக்கும். நான் அங்கு சமூகளித்திருக்கவும் இல்லை. எனவே நான் அதை விமர்சிக்கவும் முடியாது.

ஆனால் நணபருடனான என் உரையாடலின்பின் சிந்திக்கத் தூண்டிய ஒரு விடயத்தையையே இங்கு குறிப்பிட்டு எழுதுகிறேன்.
எனவே இக் கட்டுரையானது அந்த நிகழ்வின் மீதான விமர்சனம் அல்ல என்பதை மீண்டும் மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.

அங்கு சிறுவர்கள் நடித்த நாடகத்தில், தனது சகோதரனின் கருத்தினை இன்னொரு சகோதரன் ஏற்க மறுக்கிறான். மாற்றுக்கருத்துள்ள சொந்த சகோதரனை கொன்றுவிடுவதற்காக தனது மற்றைய சகோதரனிடம் இப்படிக் கூறுகிறான்.

”முடித்துவிடு இவன் கதையை, இல்லையேல் இவன் எங்களை முடித்துவிடுவான்»
10 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இப்படியான விழுமியங்களை கற்றுக்கொடுப்பது எந்தவகையில் நியாயம்? இதுவே எனது கேள்வி

இவ்வாறு வசனம்பேசக் கற்றுக்கொடுக்கும் பெற்றோரே, கலைஞர்களே, பாடசாலைகளே!

நோர்வேஜிய பாடசாலையில் சிறுவன் «நான் உன்னைக் கொன்றுவிடுவேன் (Jeg vil drepe deg) » என்று கோபத்தில் கூறினாலே பாடசாலையானது உங்களை அழைத்துக் கண்டிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படியான ஒரு வார்த்தை நோர்வேஜிய பாடசாலையின் நாடகங்களில் வந்திருக்குமா? அப்படி வந்திருந்தால் பெற்றோர்களின் கருத்து எப்படி இருந்திருக்கும் என்பது உங்களுக்குத்தெரியும். அந்தப் பெற்றோரில் நீங்களும் ஒருவர்.

அப்படியான நீங்கள் ஏன் இப்படியான கருத்துக்களை உங்கள் குழந்தைகளுக்குள் புகுத்த அனுமதிக்கிறீர்கள்? உங்களை மீறி நடந்தவிடயம் இது என்று நீங்கள் கூறமுடியாது. குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கப்படுகிறது என்பதை பெற்றோராகிய நீங்கள் அறிந்திருக்கவேண்டுமல்லவா?

எதிரியை அழித்தால்தான் நாம வாழலாமா? இந்த கருத்தியலில் சிந்தனையில் வளரும் குழந்தை எதைக் கற்றுக்கொள்ளும். எதிரியை கொன்றால் குழந்தையின் வாழ்வு மலராது… சிறையில்தான் கழியும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

உண்மையில் நாடகமானது ஒரு நுண் அரசியலை மக்களிடத்தில் பரப்புகிறது. தமிழர்களின் இறுதிப்போரின் அரசியலையே பேசியது. «எம்மிடம் மக்கள் பலம் இருக்கிறது» என்ற வசனமே அனைத்தையும் கூறுகிறது என்றார் நண்பர். அவரது கூற்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. இதைத்தான் நுண் அரசியல் என்பார்கள்.

பாடசாலைகளே!

சமூகத்தினை பிரக்ஞையுடன் வளர்ப்பது உங்கள் கடமை. இதுவா உங்கள் பிரக்ஞை? விடுதலை உணர்வை இப்படியா குழந்தைகளுக்கு ஊட்டுவது?

மற்றொருவிடயம் –

குழந்தைகள் கவிதை வாசித்தார்கள். அவர்கள் அப்போது குழந்தைகளாகவே இருக்கவில்லை. பெற்றோரின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இயந்திரங்களாகவே இருந்தார்கள் என்றார் நண்பர்.

இது ஒன்றும் இந்த நிகழ்வில் மட்டும் நடக்கும் புதிய விடயம் அல்ல.

தமிழர்கள் நாம் கவிதை வாசிப்பது என்றால் இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்று ஒரு எழுதாத சட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.

வளர்ந்தவர்களின் உடலசைவுகளுடனும், மொழியாடலுடனும் குழந்தைகளை கவிதைபாடவைத்து புளங்காகிதம் அடையும் பெரியவர்களே அந்தக் குழந்தையை குழந்தையாய் இருந்து, தான் கற்றதை தனது மொழியில் கவிதைபாட அனுமதிக்க ஏன் மறுக்கிறீர்கள்?

விடுதலை, போர் என்று உங்கள் போர்ப்பரணிகளையும், குழந்தைக்கு புரியாத உள்ளடக்கங்களையும் புரிந்துகொள்ள முடியாத குழந்தை அதனைப் பேசுவதால் எதனைக் கற்றுக்கொண்டுவிடப்போகிறது? குழந்தையிடம் இது ஒரு மகிழ்ச்சியை கொடுக்குமா? இப்படியா நாம் தமிழினை, விடுதலையுணர்வினை வளர்க்கப்போகிறோம். எப்போது அவர்களை சிந்திக்க அனுமதிக்கப்போகிறோம்?

ஒரு கிழமைக்கு முன்பு எனது இரண்டு நண்பர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பாடசாலையில் கொடுக்கப்பட்ட கேள்வியைக் கூறி இதற்கு நீ என்றால் என்ன பதில் என்றார்கள். கேள்வி இதுதான். தமிழீழத்தின் சின்னங்கள் எவை?

தங்களுக்கு கார்த்திகைச் பூவையும், செண்பகத்தையும், புலிக்கொடியையும் தவிர வேறு எதுவும் தெரியாது என்றனர்.

குழந்தைகளுக்கு எமது நாட்டினைப்பற்றி அவர்களது மொழியல் எடுத்துக் கூறி, அவர்கள் எதை சின்னமாக கருதுகிறார்களோ அதை எழுதச் சொன்னால் அது குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சியை அதிகமாக்கும். தவிர ஈழத்தமிழர்களின் சரித்திரம் இலங்கையில் பல ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தை உடையது. விடுதலைப் புலிகளின் காலம் ஏறத்தாள 40 ஆண்டுகள். தவிர நாம் அரசற்ற தரப்பு. அத்துடன் ஒரு நாட்டின் சின்னம் என்பதை பலத்துடன் இருக்கும் தரப்பே அதிகமாக முடிவுசெய்கிறது. சின்னம் என்பது எது? எதைவைத்து இது முடிவுசெய்யப்படுகிறது? யார் முடிவுசெய்வது? என்று குழந்தைகளுடன் பேசுங்கள். அவர்களை சிந்திகத் தூண்டுங்கள் என்றேன்.

அத்துடன் உங்கள் குழந்தைகள், நோர்வேயின் சின்னங்களாக எதை எதை நினைக்கிறார்கள் என்று கேட்டறிந்தபின் தொடர்புகொள்ளுங்கள் என்றேன். மாலை மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. குழந்தைகள் நோர்வே கொடி என்பதைத் தவிர பனி, மலைகள், பெரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமாதானத்திற்கான நோபல் பரிசு, விளையாட்டு வீரர்களின் பெயர்கள், வடதுருவத்திற்கு சென்றவரின் பெயர், பிறவுன் நிற சீஸ் (brown cheese), பனிமான், பனிக்கரடி, ஒற்றுமை, சமாதானம், நோர்வே இலக்கியங்களில் உள்ள பாத்திரங்களின் பெயர்கள் என்று பலதையும் கூறியதாகச் சொன்னார்கள்.

ஒரு நாட்டைப்பற்றி குழந்தைகள் எவ்வளவு அறிவுடன் இருக்கிறார்கள். அதேபோன்று தமிழீழத்தினைப்பற்றி கற்பித்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்குமா என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் கூறிய பதில். புலிக்கொடி, கார்த்திகைப்பூ, செண்பகம் ஆகியவை காணும். மற்றதுகளை எழுதினால் பிரச்சனை வரும். ஏன் வீணா பிரச்சனைப்படுவான்.

நோர்வே பற்றிய குழந்தையின் அறிவு எங்கே, எங்கள் தமிழீழம்பற்றிய அவர்களின் அறிவு எங்கே. ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடக்கூடிய இடத்திலா இருக்கிறது? இந்த இடத்தில் பிரச்சனைவேண்டாம் என்று கூறிய நண்பரிடம் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

இங்கே, யார் உங்களை பிரச்சனைப்படச் சொன்னார்கள். உரையாடலாமே. உரையாடல் அபாயமானதல்லவே. உரையாடவே பயப்படும் சமூகமாகிவிட்டோமா நாம்?

பெற்றோர்களே, கலைஞர்களே, எழுத்தாளர்களே, பாடசாலைகளே!
குழந்தைகளை சுயமாக சிந்தித்து வாழ விடுங்கள்.
அவர்களின் உலகம் இது. அவர்களே அதை செதுக்கவேண்டும். நாம் அல்ல.
எங்களின் வன்முறைக் கலாச்சாரம் எம்முடன் அழிந்துபோகட்டும்.
நடிக்கவும், கவிதைபேசவும், நடனமாடவும் என்று அவர்களின் நெஞ்சினில் விஷத்தினை விதைக்காதீர்.
குழந்தைளையே நாடகங்கள், கவிதைகள், நடனங்களின் உள்ளடக்கத்தை கற்பனை செய்யவும், எழுதவும் அனுமதித்து அவர்களின் சிந்தனைவளத்தை ஊக்குவியுங்கள்.
முக்கியமாய் பெற்றார்களே, உங்கள் குழந்தைகள் மேடையேறுகிறார்கள் என்று மட்டும் திருப்பதியுறாது அவர்கள் எதைக் பேசுகிறார்கள், நடிக்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள் என்று பார்ப்பது உங்கள் கடமை எப்போது உணரப்போகிறீர்கள்?
பெரும் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரே எப்படியானதொரு பண்பாட்டை – கலாச்சாரத்தை வளர்க்க உங்களின் திறமை விரயமாக்கப்படுகிறது என்பதை சற்றாவது சிந்தித்தீர்களா?

பெற்றொரும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் தவறான பாதையில் செல்லும் சமூகத்தினை எதிர்ப்பதற்குப் பயந்து, எதையும் பேசாது, இப்படியான வளமற்ற, தார்மீகமற்ற , சமூகவிரோதக் கருத்துக்களுக்கு துணைபோவதானது உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் மாபெரும் தவறு என்பதையும் அவர்களை வளமற்ற மனிதர்களாக மாற்றுகிறது என்பதை உணரவேண்டும்.

கற்பித்தல் என்பது ஒப்புவித்தலோ, திணித்தலோ அல்ல…. மாறாக ஆர்வத்தையும், தேடுதலையும் சிந்தனையை தூண்டுவதேart-of-teaching

– சஞ்சயன்

Leave a Comment

 

Scroll to top